மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருக்கும் இடம் பண்டைய காலத்தில் கடம்ப வனமாக இருந்தது. தேவேந்திரன் சிவலிங்கத்துக்கு பொற்றாமரை வைத்து பூஜித்த இடத்தில்தான் இப்போது பொற்றாமரைக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் வடக்குக் கரையில் சிவபூஜை நடந்த இடத்தைக் காட்டிய வணிகன் தனஞ்செயனுக்கும், இதே இடத்தில் கோயிலை அமைத்த மன்னன் குலசேகர பாண்டியனுக்கும் சிலைகள் உள்ளன. திருக்குறள் சங்கப்பலகையில் வைத்து அரங்கேறியது இந்தக் குளக்கரைதான். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானிடம் வாதிட்ட நக்கீரன் எரிந்து, மீண்டும் உயிர் பெற்றதும் இந்தக் குளக்கரைதான். .... இக்கலிங்கம் போனால் என்ன? மதுரை சொக்கலிங்கம் உண்டே துணை என்று இரட்டைப் புலவர்கள் பாடல் பிறந்தது இங்குதான். சமண ஆதிக்கம் நிலவிய காலத்தில் நீலகண்ட யாழ்பாண தம்பதிகள் பின்தொடர, பதினாறு வயதுப் பாலகனாய் பித்தா பிறைசூடியென்று பாடியபடி திருஞானசம்பந்தர் பாதம் பதிந்த இடம் இந்த பொற்றாமரைக் குளக்கரைதான். இந்திரன் பழி தீர்த்தது, வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தது எல்லாமே இந்தப் பொற்றாமரைக் குளத்தருகேதான்.