பதிவு செய்த நாள்
12
டிச
2015
10:12
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சங்க காலத்திற்கு முந்தைய வணிக நகரத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.பழங்கால மக்கள் விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு, வியாபாரத்திற்காக ஆற்றங்கரை ஓரங்களில் கூட்டமாக வாழ்ந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் வைகை நதி உருவாகி 256 கி.மீ., பயணித்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த நதிக்கரை ஓரங்களில் 293 இடங்களில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் அருகே வைகையில் இருந்து ஒரு கிளை நதி பிரிந்து சென்றுள்ளது. இந்த நதி வீரவனுார், லாந்தை, தாமரைக்குடி, புத்தேந்தல் வழியாக புல்லந்தை மங்களேஸ்வரி நகர் கடலில் கலந்திருக்க வேண்டும்.
இந்த நதிகரை ஓரத்தில் சங்ககாலத்திற்கு முந்தைய லாந்தை என்ற வணிக நகரம் இருந்துள்ளது. அதற்கு ஆதாரமாக லாந்தை சந்தைவழிதிடல், தாமரைக்குடி பகுதியில் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை தொல்லியல் ஆய்வாளர் கீழக்கரை விஜயராமு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: லாந்தை நகரம் வணிகம், விவசாயத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக முதுமக்கள் தாழிகளின் எச்சங்கள், பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை வழுவழுப்பு இல்லாமல் மங்கி உள்ளதால் 4 ஆயிரத்திற்கும் முற்பட்டது. இந்த நகர மக்களின் முக்கிய தொழிலாக வணிகம் இருந்துள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பகுதியை முழு அளவில் அகழாய்வு செய்தால் பல எச்சங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.