பதிவு செய்த நாள்
03
ஆக
2011
12:08
சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.சேலத்தில், எட்டுப்பட்டிக்கும் மூத்தவளாக அருள்பாலிக்கும் கோட்டை மாரியம்மனுக்கு, கடந்த 26ம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது. தொடர்ந்து, புஷ்ப வாகனம், நாகவாகனம், ரிஷபவாகனம், வெள்ளிவிமானம், புஷ்ப விமானம், யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை, மாலை இருவேளையும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். நேற்று இரவு 7.30 மணியளவில், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் சன்னதிக்கு பின்புறம், வேம்பு மரத்தாலான, 7 அடி உயர கம்பத்துக்கு, மஞ்சள், குங்குமம் இட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மஞ்சள் பரிவட்டம் கட்டிய கோவில் பூசாரி சிவக்குமார், வேப்பிலையுடன் கம்பத்தை சுமந்து, கோவில் பிரகாரத்தை மும்முறை வலம் வந்தார். அதையடுத்து, மூலவர் அம்மனுக்கு நேர் எதிரே, பலி பீடத்துக்கு முன் கம்பம் நடப்பட்டது. பின்னர், சிவப்பு பட்டு அலங்காரத்தில் அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்தது. விழாவில், ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.