பதிவு செய்த நாள்
18
டிச
2015
02:12
திருவண்ணாமலை: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், வழக்கமாக தினமும் காலை, 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு கோபூஜை மற்றும் உஷத்கால அபி?ஷகம் நடைபெறும். இந்நிலையில், நேற்று மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு, அதிகாலை, 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, 4 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடராஜர் சன்னதியில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் பாடப்பட்டது. மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, மூலவர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் விளக்கேற்றி, ஸ்வாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றனர்.