பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
தர்மபுரி : தமிழகத்தில் காவிரி நுழைவாயில் பகுதியான ஒகேனக்கலில், ஆடிப்பெருக்கு விழா உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. ஒகேனக்கலில் மிதமான தண்ணீர் வருகையால், அருவிகளில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் பயணிகள் மகிழ்ந்தனர். தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்ய பல்வேறு நதிகள் இருந்த போதும், அவற்றில் முதன்மையாக இருப்பது காவிரி. ஆடி 15 நாட்களுக்கு பின், சுபிட்சம் பிறக்கும் என்பதையும், கரை புரண்டு ஓடும் காவிரி நீர் போல், வாழ்வு தழைக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு, புதுமணத் தம்பதிகள், காவிரியை வணங்கி, ஆடி 18ல் மங்கல நாண் மாற்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று காலை 10 மணி முதல், மக்கள் வெள்ளமாய் மாறியது. காவிரிப் படுகை பகுதி, கூட்டாறு பகுதி, கூத்தப்பாடி முதலைபண்ணை காவிரி படுகை, ஊட்டமலை பகுதி, மணல் மேடு உள்ளிட்ட காவிரிக்கரையில், மக்கள் புனித நீராடினர்.
கடந்தாண்டு வெள்ளப் பெருக்கு காரணமாக, அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு மிதமான அளவு தண்ணீர் ஓடியதால், அருவிகளில் பயணிகள் ஆனந்த குளியல் போட்டும், பரிசல்களில் சென்று காவிரியின் அழகை ரசித்தும் மகிழ்ந்தனர்.
பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயிகள், காவிரியில் குளித்து ஆடிப்பட்ட சாகுபடி விதைகளை, காவிரி அன்னை முன் படைத்து, பூஜைகள் செய்து, விதைகளை எடுத்துச் சென்றனர். அம்மன் கோவில்களில் நடந்த ஆடி விழாவுக்காக பக்தர்கள் புனித நீராடி, கலசங்களில் நீரை எடுத்துச் சென்றனர். சிறுவர் விளையாட்டு பூங்கா, முதலை பண்ணை, மீன் காட்சியகம் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள், கூட்டம் கூட்டமாகச் சென்று ரசித்தனர். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பும், தீயணைப்புத் துறை சார்பில் ஆற்றுப்படுகையில் சிறப்பு ரோந்துப் பணி கண்காணிப்பும் செய்யப்பட்டிருந்தது. போலீஸ், சுற்றுலாத்துறை, தீயணைப்புத் துறை சார்பில், பயணிகள் பாதுகாப்பான இடங்களில் குளிக்க, "மைக் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
வெளிமாநில பயணிகள் வருகையும் அதிகரிப்பு : ஆடிப்பெருக்கையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பயணிகள் அதிக அளவில் கூடினர். அதே போல், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆடிப்பெருக்குக்கு முன், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும், ஆடிப் பெருக்கு அன்று மழை பெய்தாலும் அந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கை. காவிரியில், ஏற்கனவே ஜூலை இறுதி வாரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நேற்று காலையில் இருந்து இருண்ட வானிலையுடன் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால், இந்தாண்டு விவசாயம் செழிக்கும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.