பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவாக மது எடுப்பு விழா மிக கோலாகலமாக நடந்தது. ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மது எடுப்பு திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு நேற்று மாலை நான்கு மணியளவில் மது எடுப்பு விழா நடந்தது.இதில், ஆலங்குடி, பள்ளத்து விடுதி, ஆலங்காடு, கல்லலாங்குடி, காட்டுபட்டி, மேட்டுபட்டி மற்றும் இன்ன பிற பகுதி பொதுமக்கள் பலர் தங்களது நேர்த்தி கடனாக வேண்டிய நவதாணியங்கள் முளைப்பாரி, தென்னை பாளை ஆகியவற்றை குடத்தில் வைத்து மலர்கள் அலங்காரம் செய்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நடந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தங்களது பகுதியில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில்கள் வளரவும், திருமணமாகாத பெண்கள் நல்ல முறையில் வரன் அமையவும், குழந்தை பாக்யம் வேண்டியும், குடும்பத்தில் ஆரோக்யம் பெறவும் தங்களது கோரிக்கையை அம்மனிடம் வேண்டி தங்கள் காரியம் நிறைவேறிய பிறகும், சிலர் நிறைவேறவும் ஆயிரக்கணக்கான பெண்கள் மது எடுப்பு விழாவில் பங்கேற்றனர். ஆலங்குடி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை ஸ்ரீநாடியம்மன் நிறைவேற்றுவதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் இக்கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடக்கின்றன. இதில், பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து அம்பாளை தரிசித்து செல்கின்றனர்.