பதிவு செய்த நாள்
04
ஆக
2011
11:08
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென்பெண்ணையாற்று படுகையில் உள்ள கிராம புறங்களில் மிகுந்த உற்சாகத்துடன் ஆடி பெருக்கு கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி 18ம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கே.ஆர்.பி., அணை மற்றும் தென்பெண்ணையாற்று படுகை, காவிரியாற்று படுகை பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு கர்நாடகா மாநிலத்திலும், ஆற்றுபடுகை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தததால் ஜூன் மாத முதல் வாரத்தில் அணையின் நீர்மட்டம் 49 அடியை எட்டியது. அணையில் மொத்த நீர்மட்டம் 52 அடியாகும். ஜூன்19 ம் தேதி முதல் சாகுபடிக்காக வலது மற்றும் இடது புற கால்வாயில் வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்த நிலையில் ஆடிபெருக்கு திருவிழாவுக்காக அணையில் இருந்து ஆற்றில் ஊற்று மதகு வழியாக 100 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களை போன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆடிபெருக்கு கொண்டாடப்பட்டது. கே.ஆர்.பி., அணைக்கு மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். தென்பெண்ணையாற்றில் பொதுமக்கள் நீராடி பெண்ணையாற்றை வழிப்பட்டனர். தளி பகுதியில் சின்னாற்றிலும், அஞ்செட்டி, பிலிகுண்டுலு காவிரி படுகை பகுதியிலும் நேற்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. தென்பெண்ணையாற்று படுகை பகுதியான திம்மாபுரம், காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம், நெடுங்கல், பேருஅள்ளி, ஆவத்துவாடி, அகரம், மருதேரி,விளங்காமுடி, பாரூர், அரசம்பட்டி, இருமத்தூர் ஆகிய பகுதியிலும் மக்கள் தென்பெண்ணையாற்றில் நீராடி அந்தந்த பகுதியில் உள்ள கோவில்களில் இறைவனை வழிப்பட்டனர். கே.ஆர்.பி., அணையில் உள்ள மார்கண்டேஸ்வரர் கோவிலில் பசு வாயில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் ஏராளமானோர் மொட்டை அடித்து சிறப்பு வழிபாடு செய்தனர். புது மணத் தம்பதிகள் ஆற்று படுகை பகுதியில் புது தாலி அணிந்து கொண்டனர். கே.ஆர்.பி., அணையின் சுற்றுவட்டார பகுதிகளான காவேரிப்பட்டணம், குண்டலஹல்லி, மோரமடுகு, மிட்டஹல்லி ஆகிய பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலாவாக தென்பெண்ணையாற்றுக்கு எடுத்து வரப்பட்டு ஆற்றுப்படுகையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காவேரிப்பட்டணத்தை அடுத்த பெரியமலை அடி வாரத்தில் உள்ள தீர்தத்திலும், மலையின் நடுபகுதியில் உள்ள சுணையிலும் ஏராளமான பொதுமக்கள் நீராடினர். இதே போல் குருபரப்பள்ளியை அடுத்த ஆவல்நத்தம் சிவன் கோவிலில் உள்ள ஊற்றில் பொதுமக்கள் நீராடி இறைவனை வழிப்பட்டனர். ஆடிப்பெருக்கையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பிரசித்திபெற்ற அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மா விளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். கே.ஆர்.பி., அணை பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பொதுப்பணித்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கே.ஆர்.பி., அணை போலீஸார் அணைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் அணையோர பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பொதுமக்கள் அணைக்கு வந்து செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி நேற்று மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.