பதிவு செய்த நாள்
05
ஆக
2011
11:08
பரமக்குடி: பரமக்குடி அடுத்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா ஜூலை 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினமும் சுவாமி, அம்பாள் வெள்ளி அன்னம், சிம்மம், கமலம், ரிஷபம், கிளி, குதிரை போன்ற வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருக்கல்யாணம் நேற்று நடந்தது. காலை 9.30 மணிக்கு நாகநாதசுவாமி காசியாத்திரை புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் 9.50க்கு சவுந்தர்யநாயகி அம்பாளுக்கும், நாகநாத சுவாமிக்கும் திருக்கல்யாண வைபத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் 21 நாதஸ்வரம், 21 தவில் கலைஞர்களில் சிறப்பு கச்சேரி நடந்தது.
இரவில், திருமண கோலத்தில் சுவாமி மின்சார தீப ரதத்திலும், அம்மன் தென்னங்குருத்து சப்பரத்தில் உலா வந்தனர். திவான் மகேந்திரன், கோயில் செயல்அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி, விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. முன்னதாக அம்பாள் தவசு, உல்லாச சயன அலங்காரத்துடன் வீதி உலா, மாப்பிள்ளை அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 11.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. செயல்அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.