பதிவு செய்த நாள்
28
டிச
2015
12:12
அபிராமபுரம்: வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் தொண்டு உள்ளத்தை பாராட்டும் வகையில் பயனாளிகள் விழா நடத்தினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 70 இடங்களை தேர்ந்தெடுத்து, ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனம் மீட்பு பணியில் ஈடுபட்டது. வீடு, பொருட்களை இழந்தவர்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கியது.அரிசி உட்பட, 32 பொருட்கள் அடங்கிய பெட்டி, 30 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. இந்த பொருட்கள், 15 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். ஸ்ரீசத்யசாய் சேவா மூலம் பயன் பெற்ற பயனாளிகள், சாய்பாபாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று அபிராமபுரம், பக்ஸ் சாலையில் உள்ள சுந்தரம் பவுண்டேஷனில் விழா நடத்தினர். அதில், சாய் நிறுவனத் தின் அனைத்து இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா, சாய் மத்திய அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், சாய் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன், தமிழ்நாடு மாநில தலைவர் வரதன் பங்கேற்றனர். ஸ்ரீ சத்யசாய் சேவாவின் சேவை மனப்பான்மையை பாராட்டி பலர் பேசினர்.