ஏழையாகப் பிறந்து விட்டோமே! நாலு பேரைப் போல வசதியாக வாழ இயலவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். ஆனால், ஏழைகளுக்கு தான் சொர்க்கத்தில் முதலிடம் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.ஒரு நாள் இரவு திருநபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவதைப் பார்த்த அபூஹூரைரா (ரலி) அவர்கள், "இறை தூதரே! ஒரு போதும் உட்கார்ந்து தொழுவதை காணவில்லையே! இன்று மட்டும் உட்கார்ந்து தொழுவதேன்? என்று கேட்ட கேள்விக்கு, "" அபூ ஹூரைராவே! பசியின் கொடுமையால் என்னால் நிற்க முடியவில்லை, என்று பதில் சொன்னார்கள். இதனைக் கேட்ட அபூஹூரைரா (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். ""அழாதீர் தோழரே! இதனால் மறுமையில் கேள்வி கணக்கு லேசாக்கப்படும். செல்வந்தர்களை விட ஏழைகளே முதலாவதாக சொர்க்கம் நுழைவார்கள், என்றார்கள். ஏழையாகப் பிறந்தவர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் அவர்களது கருத்துக்கள் அமைந்துள்ளன.* ஏழையாகவே நீர் இறைவனை சந்திக்க வேண்டும்.
செல்வந்தனாக சந்திக்காதீர்!* நீர் என்னை நெருங்க முற்படுவீராயின் ஏழ்மையான வாழ்வை கடைப்பிடிப்பீராக. மேலும் செல்வந்தருடன் கூடி இருக்கும் போது கவனமுடன் இருப்பீராக!* ஒவ்வொரு வஸ்துவுக்கும் ஒரு திறவுகோல் இருக்கிறது. ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோலாகும்.* உண்மை விசுவாசியான ஒரு ஏழை அடியான் மீது, இறைவன் நேசம் காட்டுகிறான்.* நிச்சயமாக ஏழைகள் பணக்காரர்களை விட நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சொர்க்கம் நுழைந்து விடுவார்கள். ஆகவே, ஏழைகளை விரட்டி விடாதே. அவர்களுக்கு பேரீச்சைக்கனியின் ஒரு துண்டையாவது கொடுத்தனுப்பு. மேலும் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்! அவர்களுடன் நெருக்கமாக இருந்தால் நாளை கியாமத்து நாளில், அல்லாஹ் உன்னை அவன் பக்கம் நெருக்கமாக ஆக்கிக் கொள்வான்.இந்தக் கருத்துக்கள் இன்று நமது சிந்தனையை கிளறட்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.31 மணி