அதிகாலை பூஜையிலிருந்து ஆறு கால பூஜை வரை கோயிலில் நடப்பதுபோல இரவு நேர பூஜைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் பூஜைகளில் சிவராத்திரி ஒன்று நவராத்திரி மற்றொன்று. ஈசனுக்கு சிவராத்திரி என்றால் தேவிக்கு நவராத்திரி. நவராத்திரி குறித்து மார்க்கண்டேய புராணம் சிறப்பாகச் சொல்லி இருக்கிறது. சுரதா என்ற மன்னன் தன் எதிரிகளை வென்று வாகைசூட தூய்மையான வெண்ணிறம் கலந்த ஆற்றுமணலில் காளிதேவியின் உருவத்தை வடிவமைத்து அதை மனதார பூஜித்தான். காளிதேவியின் கருணையால் எதிரியை வீழ்த்தி வெற்றி வாகை சூடினான். ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான பூமியிலிருந்து மண்ணை எடுத்து அம்பாளின் உருவத்தைச் செய்ததால், நாமும் பூமியிலிருந்து மண்ணை எடுத்து அதில் இறைவனின் உருவங்களை வடிவமைத்து அதை பூஜை செய்கிறோம்.