பதிவு செய்த நாள்
08
ஜன
2016
10:01
ஸ்ரீவைகுண்டம் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோச்சனார் கோவில் யானை லட்சுமி, 14, சிறப்பு நல வாழ்வு முகாமில் பங்கேற்றுள்ளது. இந்த யானை, மவுத் ஆர்கன் வாசித்து, பொது மக்களை அசத்தியது. பாகன் பாலன் கூறுகையில், இந்த யானை ஆறு மாத குட்டியாக கோவிலுக்கு வந்தது. அப்போது இருந்து நான் அதை பராமரித்து வருகிறேன். நான் ஓய்வு நேரத்தில் மவுத் ஆர்கன் வாசிப்பது பழக்கம். யானை அருகே அமர்ந்து இதை வாசிக்கும் போதெல்லாம், என்னையே பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு முறை மவுத் ஆர்கன் கருவியை கொடுத்த போது, அதுவும் ஊத முயற்சி செய்தது. அதன்பின், எளிய முறையில் யானைக்கு பயிற்சி அளித்தேன். தற்போது நன்றாக பழகிக் கொண்டது, என்றார்.
அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ராமர் கோவில் யானை லட்சுமியும், 20, முகாமுக்கு வந்துள்ளது. இந்த யானை, கம்பு சுற்றியும், சங்கிலி மணியை அடித்தும் காண்பித்தது. பாகன் ரங்கன் கூறுகையில், இந்த யானை நான்கு வயதில் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த யானை குறும்பு செய்யாமலிருக்க ஒரு குச்சியை தும்பிக்கையில் வைத்து விடுவேன். அது, குச்சியை சுற்றிக் கொண்டே இருந்தது. இதை பார்த்த நான், யானை முன், சிலரை கம்பு சுற்ற வைத்தேன். அதை பார்த்த யானை, தானும் கம்பு சுற்ற பழகிக் கொண்டது. அதே போன்று மவுத் ஆர்கன் வாசிக்கவும் கற்றுக் கொண்டது, என்றார்.