பதிவு செய்த நாள்
09
ஜன
2016
11:01
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் ராகு கேது தோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாக உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் உள்ளது. இங்கு ராகு கேது பகவான்கள் தனி சன்னதியில் தம்பதி சமேதராக எழுந்தருளியுள்ளனர். கோயில் கிழக்கு திசை பார்த்தும், வாயிலில் புண்ணிய நதி ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதும் காசிக்கு அடுத்து இங்கு தான் உள்ளதாக கூறப்படுகிறது.
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பகவான் கன்னியிலிருந்து சிம்ம ராசிக்கும், கேது பகவான் மீனத்திலிருந்து கும்ப ராசிக்கும் நேற்று பிற்பகல் 12.37 மணிக்கு பெயர்ச்சியயினர். இதையொட்டி காலை முதல் பக்தர்கள் கூட்டம் கோயிலில் குவிந்த வண்ணம் இருந்தது. ராகு கேது பகவான்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், அபிஷேக ஆராதனைகன் நடந்தன. மேஷம், கடகம், ரிஷபம், தனுசு, மகரம், மிதுனம், துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளுக்குரியவர்கள் பரிகாரத்திற்காக தங்களின் பெயர் ராசிக்கு அபிஷேகம் செய்தனர். பூஜைகளை நீலகண்ட சிவாச்சாரியார், ஏகாம்பர சிவாச்சாரியார் செய்தனர்.
* ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள நவக்கிரக கோயிலில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அரச மரத்து விநாயகர் கோயிலில் ராகு-கேது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. பக்தர்கள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளை சார்பில் தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.