கண்கண்ட தெய்வமான சூரியனுக்குரிய பண்டிகை பொங்கல். இந்நாளில் வாசலில் பொங்கலிடுவதே உயர்ந்தது. பொங்கலுக்கு முதல்நாள் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பொங்கலன்று காலையில் வாசலில் விளக்கேற்றி வைத்து, வாழை இலை மீது மஞ்சள் அல்லது சாணப் பிள்ளையாரை வைக்க வேண்டும். இலையில் பச்சரிசி பரப்பி, கிழங்கு, காய்கறிகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் வைக்க வேண்டும். பொங்கல் வைக்கும் மண் அல்லது செம்பு, பித்தளை பானையில் மஞ்சள் குலை கட்டி இருக்க வேண்டும். பனை அல்லது தென்னை ஓலை, சுள்ளிகள் கொண்டு அடுப்பு எரிப்பது நல்லது. பொங்கல் பொங்கி வரும் போது பெண்கள் குலவையிட வேண்டும். தெரியாதவர்கள் பொங்கலோ பொங்கல் என்று சொல்லலாம். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி சூரியனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். இதனால் ஆண்டு முழுவதும் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வ வளம் நிலைத்திருக்கும்.