பதிவு செய்த நாள்
13
ஜன
2016
12:01
தஞ்சாவூர்: மகாமகத்திற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக, தபால் துறையுடன் இணைந்து, 1 லட்சம் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிட அறநிலையத் துறை, சார்பில், 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மகாமக பெருவிழா, பிப்ரவரி, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிப்ரவரி 22ம் தேதி விழாவின், முக்கிய நிகழ்ச்சியான மகாமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது. மகாமக விழாவில், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து, 75 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி, தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகள் சார்பில், பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் வரும், 5ம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மகாமக பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை அறநிலையத் துறை சார்பில் வரவேற்கும் விதமாக, சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்படுகிறது. அஞ்சல் துறைக்கு, அறநிலையத் துறை சார்பில், மயிலாடு துறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், இரண்டு லட்சம் ரூபாய் காசோலையை அஞ்சல் துறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.