பதிவு செய்த நாள்
20
ஜன
2016
12:01
உடுமலை: உடுமலை அருகே, மலைவாழ் குடியிருப்பான கரட்டுபதியில், அமராவதி வனச்சரகத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனச்சரகத்துக்குட்பட்டது கரட்டுப்பதி மலைவாழ் குடியிருப்பு. சமத்துவப்பொங்கலை அமராவதி வனச்சரகம், கரட்டுப்பதி சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குழுவினர் மற்றும் இப்பகுதி மலைவாழ் மக்கள் இணைந்து கொண்டாடினர். இப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர். சுற்றுச்சூழலை பேணி காப்பதில் பெரும் பங்கு வகிப்பது மலைவாழ் மக்களே.
சமத்துவப்பொங்கல் கொண்டாடுவதால் அனைத்து மக்களிடமும் ஒற்றுமையுணர்வு வளர்விக்கும் விதமாகவும், பாரம்பரியத்தை கடைபிடிப்பதுக்கும் வாய்ப்பாக அமைகிறது. பின்பு பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கயிறு இழுத்தல் மற்றும் இசைநாற்காலி போட்டிகளும், குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், கயிறுஇழுத்தல், இசை நாற்காலி மற்றும் நடன போட்டிகள் நடந்தன. வெற்றிபெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
முதல் முறையாக நடந்தது: இதுகுறித்து அமராவதி ரேஞ்சர் தங்கராஜ் பன்னீர் செல்வம் கூறியதாவது: இந்த சமத்துவப்பொங்கல் கரட்டுப்பதி சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு மற்றும் அமராவதி வனச் சரகம் இணைந்து நடத்தியது. இப்பகுதியில் சமத்துவப்பொங்கல் நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மலைவாழ் மக்கள் மற்றும் வன அலுவலர்களுக்கிடையே ஒற்றுமையுணர்வை ஏற்படுத்த முடியும். சமத்துவப்பொங்கல் நிகழ்ச்சியை வரும் ஆண்டுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். . நடனபோட்டியில் சிறப்பாக ஆடிய குழந்தைகளை தேர்ந்தெடுத்து தொடர் பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர் பயிற்சியின் மூலம் மாவட்ட மற்றும் மாநில கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.இவ்வாறு, தங்கராஜ் பன்னீர் செல்வம் கூறினார்.