ஆடி 28ம் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கத்தில் ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2011 12:08
ஸ்ரீரங்கம்: "ஸ்ரீரங்கம் கோவிலில் வரும் 13ம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும், செயல் அலுவலருமான ஜெயராமன் தெரிவித்துள்ளார். செயல் அலுவலர் ஜெயராமன் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை 13ம் தேதி ஆடி 28ம் பெருக்கு திருவிழா நடைபெறவுள்ளது. அன்று நம்பெருமான் மூலஸ்தானத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் தெற்குவாசல் அம்மா மண்டபம் சாலை வழியே சென்று காலை 11.30 மணிக்கு அம்மா மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, அம்மா மண்டபம் சாலை, திருவள்ளுவர் வீதி வழியே வெளி ஆண்டாள் சன்னதிக்கு சென்று அங்கு மாலை மாற்றிக் கொண்டு இரவு 9.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் சென்றடைவார். காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, 11.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபம் சேருவார். மாலை 4 மணிக்கு அலங்காரம் அமுது செய்து, 4.45 மணிக்கு காவிரித் தாயாருக்கு மாலை சமர்ப்பிக்கப்படும். இரவு 8.30 மணிக்கு அம்மா மண்டபத்திலிருந்து புறப்பட்டு, வெளி ஆண்டாள் சந்நதியில் இரவு 9.30 மணிக்கு மாலை மாற்றிக் கொண்டு மூலஸ்தானம் செல்வார். இதை முன்னிட்டு காலை விஸ்வரூபம் சேவை கிடையாது. காலை 7.30 - மாலை 5.30 மணி வரை இலவச சேவை. மாலை 5.30 மணி முதல் 6.45 மணி வரை பூஜா காலம் என்பதால், சேவை கிடையாது. மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை இலவச சேவை.