பதிவு செய்த நாள்
25
ஜன
2016
10:01
பழநி: அரோகரா கோஷத்துடன் தேரோட்டம்: பழநி பெரியநாயகியம்மன் கோவிலில், வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா கோஷத்துடன், தைப்பூச தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பழநி தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்த்ர தேவருடன், சண்முக நதி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, காலை 11:00 மணிக்கு, திருத்தேரேற்றம் செய்யப்பட்டனர். மாலை 4:15 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, நான்கு ரதவீதிகளிலும் தேர்வலம் வந்து, 5:15 மணிக்கு நிலையை அடைந்தது. சிங்கப்பூர், போலந்து, பெல்ஜியம் உள்ளிட்ட, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர்.இன்று இரவு 8:00 மணிக்கு, முத்துகுமாரசுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளல், வையாபுரிகுளத்து கரையில் வாண வேடிக்கை நடக்கிறது. 27ல் தெப்ப உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
காத்திருந்து தரிசனம்: பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்தனர். பழநி தைப்பூச திருநாளை முன்னிட்டு மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அடிவாரம் பகுதிகளில் குவிந்தனர். பழநி அடிவாரம், கோயில் தங்குவிடுதிகள், தனியார் லாட்ஜ்கள் அனைத்தும் நிரம்பின. சன்னதிவீதி, பாதவிநாயகர் கோயில் கிரிவீதிகளில் பக்தர்கள் திரண்டிருந்தனர். அமைச்சர் காமராஜ் நேற்றுமுன்தினம் இரவு கோயில்விடுதியில் தங்கி அதிகாலை 5 மணிக்கு சுவாமிதரினம் செய்தார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். தாரை, தப்பட்டை மேளதாளங்கள் முழங்க பால், மயில், இளநீர் காவடிகளுடனும், கரும்பு காவடிகளுடனும், சேவல்கள், முகத்தில் வேல் அலகு குத்தியும், முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து கிரிவலம் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைகோயிலுக்கு பக்தர்கள் சன்னதிவிதி, பாதவிநாயகர்கோயில், கும்பாபிஷேக நினைவரங்கம் வழியாக சென்று யானைப்பாதையில் 10க்கு மேற்பட்ட தடுப்புகளில் 20நிமிடங்களை வரை நிற்க வைத்து போலீசார் அனுப்பினர். பக்தர்கள் 7 மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அமரத்தடை: நெரிசலை கட்டுப்படுத்த மலைக்கோயிலில் தரிசனம் செய்த பக்தர்கள் அமர்ந்துஓய்வு எடுக்க தடைவிதிக்கபட்டதால் படிப்பாதை வழியாக கீழே இறங்கினர். தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம், முடிக்காணிக்கை டிக்கெட்டுகள் பஞ்சாமிர்தம் வாங்கவும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து வின்ச்-கள், ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றனர்
வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்: தைப்பூசத்திற்கு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் சண்முகா நதி, இடும்பன் குளம், கிரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தியும், காவடிகள் எடுத்து ஆட்டம், பாட்டத்துடன் வந்த பக்தர்களை புகைப்படம், வீடியோ எடுத்தனர். மேலும், பக்தர்களும் அவர்களுடன் இணைந்து காவடியுடன் புகைப்படம் எடுத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து, பாரிஸைச் சேர்ந்த ஹென்றிகவுஸ்சி கூறியதாவது: இந்திய கலாசாரங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. ஒவ்வொரு மாநிலமாக சுற்றுலா சென்று புகைப்படம் எடுத்து வருகிறேன். முதல்முறையாக பழநி தைப்பூச விழாவிற்கு வந்துள்ளேன். குரூப் டான்ஸ் சூப்பர், எனக் கூறியவர், பக்தர்கள் எடுத்து வந்த காவடியை வாங்கி ஒரு ஆட்டம் போட்டு, தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.