பதிவு செய்த நாள்
25
ஜன
2016
10:01
வடலுார்:வடலுார் சத்திய ஞான சபையில், நேற்று நடந்த தைப்பூச ஜோதி தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், நேற்று முன்தினம், 145வது தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜோதி தரிசனம்:முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணி; 10:00 மணி; பிற்பகல், 1:00 மணி; இரவு, 7:00 மணி; 10:00 மணி; இன்று அதிகாலை, 5:30 மணி என, ஆறு காலங்கள், கரும்பெருந்திரை, நீலப்பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என, மகா மந்திரம் முழங்கி, ஜோதி தரிசனம் செய்தனர். முதல் கால ஜோதி தரிசனத்தில், அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், ஊரன் அடிகள், ஞானானந்தா சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நாளை, 26ம் தேதி மதியம், 12:00 மணிக்கு வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை திறக்கப்பட்டு, மாலை 6:00 மணி வரை தரிசனம் நடக்கிறது. வெளிநாட்டினர் ஏமாற்றம்:வடலுார் சத்திய ஞான சபையில் தை மாதம் நடைபெறும் ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் காலை, 6:00 மணி முதல், தரிசனத்தை காண சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பலர் வருவர். அவர்களை சன்மார்க்க சங்கத்தினர் அழைத்து வந்து வி.வி.ஐ.பி., நுழைவாயில் வழியாக தரிசனம் செய்ய அழைத்துச் செல்வர். இந்தாண்டு, போலீசார், வெளிநாட்டு பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால், பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.