துருவகெரே மற்றும் ஹொசபுதனூரு என்ற இரு ஊர்களிலும் இத்தகைய சைவ, வைணவ, கோயில்கள் கட்டப்பட்டு இருப்பது சமய ஒற்றுமையைக் காட்டுகிறது. பெயருக்கேற்றவாறு இந்தக் கோயில் ஊரின் மூலையில்தான் இருக்கிறது. கோயிலுக்குள் செல்ல தரைமட்டத்திலிருந்து கொஞ்சம் கீழே இறங்கிச் செல்ல வேண்டி இருந்தது. அழகிய கோயில் இரு புறமும் திண்ணைகளுடன்கூடிய முகமண்டபத்தை அடுத்து தெற்குப் பார்த்த கோயில். எதிரில் நவரங்கா மண்டபத்தில் கணபதி, சுப்ரமண்யர், சப்தமாதர்கள் தரிசனம் கிடைக்கிறது. வலதுபுறம் நந்திதேவர் தரிசனமும், இடதுபுறம் கிழக்கு நோக்கிய கருவறையில் மூலே சங்கரரின் லிங்கரூப தரிசனமும் கிடைக்கிறது. நந்திதேவர் அருகில் சுவரில் உள்ள துளை வழியே பிரதி பவுர்ணமிதோறும் சந்திர கிரணங்கள் சங்கரரை தரிசிப்பதாகச் சொல்கிறார்கள். பிரதட்சணப் பாதையுடன், நட்சத்திர வடிவ பீடம் மீது எழுப்பப்பட்ட இந்த ஏககூட கோயில் கொள்ளை அழகு. பெங்களூருவிலிருந்து 120 கி.மீ. தொலைவில், தும்கூரில் உள்ள துருவகெரெ என்ற நகரில் அமைந்துள்ளது. மூலே சங்கரா கோயில்.