சூரனை சம்ஹரிக்கப் புறப்பட்ட சுப்ரமண்யன், புறப்படும்முன் புனித தலம் ஒன்றுக்குச் செல்ல நினைத்தான். தந்தை ஈசனின் மொழியால், கும்பகோணத்தின் மகிமை அறிந்திருந்த முருகன், சூரசம்ஹாரத்தில் அசுரர்களை வெல்வதற்கு அருளையும், மந்திர சக்தியையும் பெறுவதற்கு உகந்த இடம் குடந்தை ஒன்றே என உணர்ந்து அத்தலத்தை அடைந்தான். பின் இறைவன் இறைவியை வழிபடுவதற்கு முன் நீராடுவதற்கு தீர்த்தம் வேண்டி அம்பாளை பூஜிக்கின்றான். அம்பாளும் ஆறுமுகனுக்காக தனது நகத்தினால் நிலத்தைக் கிள்ளி எடுத்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினாள். இத் தீர்த்தம் மங்கள கூபம் என்று அழைக்கப்படுகிறது. பிறகு கந்தன் அத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும் அம்பாளையும் தரிசித்தான். கந்தன் நீராடியதால் இது கந்தகூபம் என்று அழைக்கப்படுகிறது.
சூரசம்ஹார நாளில், பொம்மையிலான அசுரனின் ஒன்பது தலைகளையும் வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியை மங்கள கூபத்தில் கழுவுகின்ற ஐதிகம் இன்றும் இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது. ஆதிகும்பேசுவரர் கோயிலில் ராஜகோபுரத்தின் வட மேற்கு திசையில் கோபுரத்தையொட்டி இக்கூபம் உள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற இத்தலத்து முருகன், உட்பிராகாரத்தின் மேற்புறத்தில் ஆறு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.