திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் விடுதி திறக்கப்படுமா ?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 12:02
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதி சமூகவிரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதால், விரைவாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திருக்கோவிலூர் நகரின் வளர்ச்சிக்காக முதல்வர் ஜெ., பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில் ஒரு சில பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட பணிகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது. குறிப்பாக புராதான நகரமாக சட்டசபையில் அறிவித்து, அதற்காக ஒரு கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்தார். இதில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது. வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டது. அதேபோல், சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 1.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட பணிகளில், பெரும்பான்மை நிறைவு பெறாத நிலையில், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன கழிவறை கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளது. வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதி மற்றும் நவீன கழிவறைகள் தற்போது சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சிறப்பு வாய்ந்த இத்தளத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அத்துடன் புனிதம் பேணிகாக்கப்பட வேண்டிய இடத்தில், கட்டப்பட்ட தங்கும் விடுதி தற்போது சமூக விரோதிகளுக்கு புகலிடமாக மாறியிருப்பது, பக்தர்களையும், பொதுமக்களையும் வேதனையடையச் செய்துள்ளது. ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள நிலøயில், மது அருந்தும் இடமாக இக்கட்டடம் மாறியுள்ளது. உடனடியாக கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதன் மூலம் சமூக விரோத செயல்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இதனால் கோவிலின் புனிதமும் பாதுகாக்கப்படும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.