டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே, பாறை முனியப்ப சுவாமி கோவில் திருவிழா நேற்று நிறைவடைந்தது. டி.என்.பாளையம் வனச்சரகத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில், விளாங்கோம்பை வன செட்டில்மென்ட் கிராமம் உள்ளது. இங்குள்ள பாறை முனியப்ப சுவாமி கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஊர் காவல் தெய்வமான பாறை முனியப்ப சுவாமிக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கிராமத்தில் துஷ்டதோஷங்கள் விலகி, விவசாயம் செழிக்க சுவாமிக்கு நள்ளிரவில் கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்குள்ள கோவில் வகையறா கல்லூத்து மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி தினந்தோறும் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியத்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கோவில் விழா நேற்று மறுபூஜையுடன் நிறைவடைந்தது. விழாவில் கொங்கர்பளையம், குண்டேரிப்பள்ளம், கம்பனூர், குன்றி, தொட்டகோம்பை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.