பதிவு செய்த நாள்
09
பிப்
2016
12:02
எருமப்பட்டி: எருமப்பட்டி அடுத்த, ஒசக்கோட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தொட்டு அப்ப பெருவிழா முன்னிட்டு, வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே ஒசக்கோட்டையில் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தொட்டு அப்ப பெருவிழா, 37ம் ஆண்டாக நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 6ம் தேதி, இரவு, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், 64 யோகினி, 64 பைரவர் பூஜைகள், தீபாராதனை நடந்தது. நேற்று, முன்தினம் காலை மகாசண்டி ஹோம யாக பூஜை, மாலை, அம்மனுக்கு பண்டாரம் கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு, கணபதி பூஜை, 7 மணிக்கு, கோமாதா பூஜை, 8 மணிக்கு, அம்மனுக்கு மாங்கல்யதாரணம், 9 மணிக்கு, திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, காலை, 10.15 மணிக்கு, சக்தி அழைப்பு, மதியம், 2 மணிக்கு, சாமுண்டி அழைப்பு, மாலை, 6.15 மணிக்கு, மகாஜோதி அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், வீரக்குமாரர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (பிப்., 9) காலை, 10.30 மணிக்கு, மஞ்சள் நீர் மெரமனை (வசந்த உற்சவம்) நடக்கிறது.