மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 04:05
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழாவைத் தொடர்ந்து, அழகர்கோவிலில் ஏப்., 27ல் திருவிழா தொடங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க, ஏப்., 29 மாலை அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் அலங்காரத்தில் கண்டாங்கி பட்டுடுத்தி கையில் வேல் கம்புடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை மதுரை மூன்றுமாவடியிலும், மாலையில் அவுட் போஸ்ட் பகுதியிலும் அவருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நுாபுர கங்கை தீர்த்தம் கொண்டு கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை, பட்டு அணிந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை கருப்பணசுவாமி சன்னதி முன் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தங்கக்குதிரையில் அதிகாலை 5:40 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு அவரை வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரையில் வரவேற்றார். நாட்டில் விவசாயம் செழிப்பதை உணர்த்தும் வகையில் அதிகாலை 5:50 மணிக்கு பச்சை பட்டுடுத்தி பக்தர்கள் வெள்ளத்தில் மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கோவிந்தா கோஷங்கள் அதிர வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சர்க்கரை தீபம் ஏற்றி அவரை வழிபட்டனர்.
முனிவருக்கு சாப விமோசனம் : இன்று (மே 2) காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனுார் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். மதியம் அங்கிருந்து கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இரவு 10:00 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் திருமஞ்சனமாகி, மதியம் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் காட்சி தருகிறார். இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், மே 5 காலை 10:40 மணிக்கு மேல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.