பதிவு செய்த நாள்
18
ஆக
2011
10:08
திருநெல்வேலி : துப்பாக்குடி ஆதித்தவர்னேஷ்வரர் கோயிலில் வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு 21ம் தேதி கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் துவங்குகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஜோதிர்லிங்க ஸ்தலங்கள் மேலச்செவல், துப்பாக்குடி போன்றவையாகும். இந்த இரண்டு ஸ்தலங்களில் உள்ள சிவாலய மூலவருக்கு ஆதித்தவர்னேஷ்வரர் என்ற திருநாமம் விளங்குகிறது. எல்லாம் வல்ல சிவபெருமான் உக்கிரவழுதி என்ற மன்னனுக்கு வருணன் மூலமாக கொடுத்தனுப்பிய சிவலிங்கங்கள் இத்தலங்களில் உள்ளன. இந்த லிங்கங்களுக்கு ஆத்ம லிங்கம், ஜோதிர் லிங்கம், மேகலிங்கம், ஆகாச லிங்கம், வருண லிங்கம் போன்ற பல திருநாமங்கள் உண்டு. இருப்பினும் இந்த இரண்டு லிங்கங்களும் மேலச்செவலில் உள்ள ஆதித்தவர்னேஷ்வரர் கோயிலிலும், துப்பாக்குடி ஆதித்தவர்னேஷ்வரர் கோயிலிலும் மூலவர் அருகே எழுந்தருளி இருப்பதை வேத வியாச பகவான் எழுதிய தாமிபரணி மகாத்மியம் சிறப்பித்து கூறுகிறது.
இவ்வாறு பல சிறப்புகள் கொண்ட ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்றான துப்பாக்குடி ஆதித்தவர்னேஷ்வரர் கோயிலில் 61 ஆண்டுகளுக்குப் பின் வரும் 24ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 21ம் தேதி காலை 7 மணிக்கு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியன நடக்கிறது. 22ம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்த சங்கிரஹணம், மிகுத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், மாலை 6 மணிக்கு கடஸ்தாபனம், முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடக்கிறது. 23ம் தேதி காலை 8 மணிக்கு விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 5 மணிக்கு விசேஷ சந்தி, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகதினமாகிய 24ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 9.45 மணி முதல் 10.15 மணிக்குள் தெய்வ விநாயகர் மற்றும் சபாபதி கோயில் மகா கும்பாபிஷேகமும், 10.15 மணி முதல் 10.45 மணிக்குள் ஆனந்தவல்லி உடனுறை ஆதித்தவர்னேஷ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலா நடக்கிறது. யாக சாலை பூஜை காலங்களில் வேத பாராயணம், தேவார திருமுறைகள் சிறப்பு பஞ்ச வாத்திய இசைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் கைலாச பட்டர் குடும்பத்தினர், தொழிலதிபர் பழவூர் முருகவேல், கோயில் கைங்கர்ய அறக்கட்டளை நிறுவன தலைவர் நாராயணன் கணபதி, ராமச்சந்திரன், இசக்கி, காந்தி, பழனி, சுப்பிரமணியன், மாயாண்டி, பிச்சையா, மீனாட்சி சுந்தரம் பிள்ளை குடும்பத்தினர், லண்டன் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் நாகநாத குருக்கள், பஞ். தலைவர் மாடசாமி, துணைத் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கும்பாபிஷேக கமிட்டியினர் செய்துள்ளனர்.