சிதிலமடைந்துள்ள தளவானூர் சிவன் கோவில்:கல்வெட்டுகள் பாதுகாக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2011 10:08
செஞ்சி : செஞ்சி அருகே சோழர்கால சிவன் கோயில் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் பல்லவர் கால குடைவரைக்கு உதாரணமாக செஞ்சி அருகே உள்ள தளா வானூர், மண்டகப்பட்டு ஆகிய இடங்களை குறிப்பிடுகின்றனர். இதில் தளவானூரில் உள்ள சத்ரு மல்லேஸ்வராலயம் என்ற குடைவரைக் கோவிலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கி.பி. 580-630 ஆண்டில் உருவாக்கினான். இந்த குடைவரை கோவிலை செஞ்சி கோட்டையில் உள்ள இந்திய தொல்லியல் துறையினர் பராமரித்து வருகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊரில் மேலும் ஒரு சிவன் கோவில் அழிவின் விளிம்பில் உள்ளது. ஊருக்கு மத்தியில் சிறந்த கட்டடக்கலையுடன் காணப்படும், இந்த சிவன் கோவிலின் முன்புறம் மகா மண்டபம், முக மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவையும், கருவறையில் சிவலிங்கமும் உள்ளது. மேலும் கோவி லின் உள்ளே அம்மாள், பைரவர், தட்சணாமூர்த்தி சிலைகள் உள்ளன. பிற்கால சோழர்கள் இக்கோவிலை கட்டியுள்ளனர். கோவிலின் வெளியில் உள்ள கற்சுவர்களிலும், கோவில் உள்ளே உள்ள தூண்களிலும் பழங்கால கல்வெட் டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மூலவரின் பெயர் பற்றியோ, கல்வெட்டுக்கள் குறித்தோ இவ்ஊர் மக்கள் எந்த தகவலையும் அறிந்திருக்க வில்லை. பழமையான இக்கோவிலின் பல பகுதிகள் சிதிலமடைந்து வருகின்றன. கருவறை கோபுரத்தின் மீது பெரிய அளவில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்கள் ஆழமாக ஊடுருவி கோவில் கட்டத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கோவில் கோபுரமும், இதன் கீழ் உள்ள கல் கட்டுமானமும் சரிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு என எந்த வருவாயும் இல்லை என்பதால் கிராம மக்களும் இக்கோவிலை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த கோவிலை சீரமைத்து பாதுகாக்க மத்திய அரசின் இந்திய தொல் பொருள் துறையினர் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.