வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் குளிர்ந்த மலை ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவிலில் 22ம் ஆண்டு ஆடிக்கழுவாடி திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு தவிட்டுப்பாளையம காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் மற்றும் 504 பால்குடங்கள் அபிஷேக தீர்த்தமாக பக்தர்கள் ஊர்வலமாக, வாணவெடிகள் முழங்க பாலத்துரை, கடைவீதி, வேலாயுதம்பாளையம் வழியாக குளிர்ந்தமலை உற்சவர் பல்லாக்கு ரதத்துடன் சென்றனர். தொடர்ந்து பால்குட அபிஷேகம் மற்றும் ஆடிக்கழிவு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மூலவருக்கு செய்யப்பட்டது. ஆடிமாதத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து இன்னல்களும், துன்பங்களும் நீங்கி ஊர்மக்கள் அனைவரும் நலமுடன் வாழ ஸ்ரீ முனியப்ப சாமிக்கு, விஷேசகால மஹா தீபாராதனை நடந்தது. பகல் 1 மணிக்கு வெள்ளிகாப்பு அலங்காரம் மூலவருக்கு செய்யப்பட்டு, விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் பூசாரி மோகன் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஏற்பாடுகளை குளிர்ந்தமலை ஸ்ரீ முனியப்ப சுவாமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.