ஒருமுறை சிவராத்திரியன்று வேடன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான். விலங்கு ஏதும் சிக்கவில்லை. குடும்பத்தினர் பட்டினியாக கிடப்பார்களே என்பதால், ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். இரவாகியும் விலங்குகள் வரவில்லை. மரத்தில் அமர்ந்தபடியே விலங்குகளுக்காக காத்திருந்தான். அவன் அமர்ந்திருந்தது வில்வமரம் என்பதையும், அதன் கீழே சிவலிங்கம் இருந்ததையும் அவன் அறியவில்லை. தற்செயலாக, அவன் வில்வ இலைகளை பறித்து கீழே போட, கீழிருந்த சிவன் அதையே அர்ச்சனையாக ஏற்றார். இந்த சம்பவம் நிகழ்ந்த தலம், திருவாரூர் மாவட்டம் திருவைகாவூர். இங்கு சிவன் வில்வவனநாதராக வீற்றிருக்கிறார். சிவராத்திரிக்கு மறுநாள் காலையில் வேடனின் ஆயுள்காலம் முடிவதாக இருந்தது. இதையறிந்த எமன் வைகாவூர் வந்து சேர்ந்தான். அவனை நந்திதேவர், தன் மூச்சைக் கொண்டே அசையாமல் நிறுத்தி விட்டார். இப்போதும், நந்தி எமனை நிறுத்திய கோலத்தில் கோயில் வாசலை நோக்கி திரும்பியிருக்கிறார். கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உயிர் காக்கவும், ஆயுள் விருத்திக்கும் இவரை வணங்கி வரலாம்.