பதிவு செய்த நாள்
19
பிப்
2016
11:02
குறிச்சி: வெள்ளலுார் இடையர்பாளையம் கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் விழா நடந்தது. விழா, 2ம் தேதி இரவு, சாமி சாட்டுதலுடன் துவங்கியது. 9ல், கம்பம் போடுதலும், 12ல், 108 திருவிளக்கு வழிபாடும், 14ல் தீர்த்த காவடிகள் பூஜையும் நடந்தன. 16ம் தேதி இரவு, குண்டம் பூ வளர்த்தலும், நள்ளிரவு அம்மன் அழைத்தலும் நடந்தன. கடந்த 17ம் தேதி அதிகாலை, அம்மன் ஆற்றுக்கு புறப்படுதல் நடந்தது. பின்னர், சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, சக்தி கரகம் எடுத்தவர்கள் முதலிலும், அடுத்து பக்தர்களும் குண்டம் இறங்கினர். சில பக்தர்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர்.
இதையடுத்து, பெண்கள் குண்டத்தை சுற்றி வந்து, உப்பு, பழம், கற்பூரம், பூ உள்ளிட்டவைகளை குண்டத்தினுள் போட்டு, வணங்கினர். மதியம், அக்னி அபிஷேக ஆராதனை, அன்னதானமும், மாலை மாவிளக்கு பூஜையும் நடந்தன. திரளானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டுச் சென்றனர். நேற்று பகல், 1:00 மணிக்கு மேல், மஞ்சள் நீராடுதல் நடந்தது. இன்று மாலை, 5:00 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், இரவு, 10:00 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு பூஜையும் நடக்கின்றன. 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, அபிஷேக ஆராதனை மற்றும் சான்றோருக்கு மரியாதை செய்தலும் நடக்கின்றன. 24ம் தேதி மதியம், 12:00 மணிக்கு பிளேக் மாரியம்மன், மதுரைவீரன் மற்றும் முனியப்பன் சுவாமிகளுக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.