பதிவு செய்த நாள்
23
பிப்
2016
11:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவையொட்டி, மயான பூஜை பிப்., 22 முன்தினம் நள்ளிரவு நடந்தது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை,பிப்., 22 முன்தினம் நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகரன், மயான அருளாளி அருண், அம்மன் அருளாளி குப்புச்சாமி உட்பட பல அருளாளிகள், அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன், ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்கு சென்றனர். மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். அதிகாலை, 1:30 மணி முதல் 2:00 மணிக்குள் பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், அருளாளி எடுத்து வந்த அம்மனின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத்துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். அம்மன் உருவத்தை சிதைத்தார். கழுத்துப்பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. இதன்பின், மயான பூஜை 2:00 மணிக்குள் முடிந்தது. மயான பூஜையில், ஆனைமலை மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ‘அம்மா தாயே... மாசாணி தாயே...’ என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் கழுத்துப்பகுதியிலிருந்த மண் எடுக்கப்பட்டு, சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. நாளை, 24ம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுகிறது.