பதிவு செய்த நாள்
23
பிப்
2016
12:02
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த, குண்டம் இறங்கினர்.
பழமை வாய்ந்த இக்கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 8 ம் தேதி கொடிக் கம்பம் நடப்பட்டு, 15 நாள் நோன்பு சாட்டப்பட்டது. பக்தர்கள் தினமும், கொடிக்கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி இரவு, 7:00 மணியளவில், மாமாங்கம் ஆற்றில் சக்தி விந்தையை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை, 7:00 மணியளவில் பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, வழிபாடு செய்தனர். காலை, 10:00 மணியளவில், 60 அடி நீளமும், மூன்று அடி அகலமும், ஒன்றேகால் அடி ஆழமுள்ள குண்டம் திறக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு குண்டத்திற்கு பூப்போடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருள, மாமாங்கம் ஆற்றில் இருந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த, பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிப்.,22 காலை, 6:00 மணியளவில் மாமாங்கம் ஆற்றில் இருந்து சக்தி விந்தையை அழைத்து வருவதல் நிகழ்ச்சியுடன், குண்டம் இறங்கும் பக்தர்கள் உடன் ஊர்வலமாக ஆர்.எஸ்.ரோடு, திரு.வி.க வீதி, விவேகானந்தர் வீதி வழியாக ஆதிபட்டி விநாயகர் கோவில் வந்தனர். அங்கிருந்து, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு சென்று, மீண்டும் ஆர்.எஸ்.ரோடு வழியாக கோவிலுக்கு வந்தனர். அங்கு குண்டத்தை சுற்றிலும் பூக்கள் போடப்பட்டன. பின், அய்யாசாமி கோவில் பூசாரி குண்டத்திற்கு பூஜை செய்து, குண்டம் விழா துவக்கி வைத்தார்.
முன்னதாக பிளேக் மாரியம்மன் சிலைக்கு வெண்ணை பூசப்பட்டது. பின், கரகம், சக்தி விந்தை எடுத்த பக்தர்கள் முதலில் குண்டம் இறங்கினர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணியளவில் சக்தி விந்தையை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது.
பின், இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை பகல், 12:00 மணிக்கு மகா அபிசேகத்துடன் குண்டம் திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.