நாலாயிரத் திவ்ய பிரபந்தம் மீண்டும் நமக்குக் கிடைக்கவும், அதை இசையோடு பாடவும் வழி செய்தவர் ஸ்ரீமந் நாதமுனிகள். ஒரு முறை அவர் தன் குடிலில் இருந்தபோது, பெண்ணொருத்தி வந்து வணங்கி, ஸ்வாமி, நம் அகத்தின் அருகே வில்லாளிகள் இருவர், அழகிய பெண்ணொருத்தி என மூவர் ஒரு குரங்குடன் வந்து, நாதமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளாரா ? எனக் கேட்டனர் என்று கூறினாள். பரவசத்துடன் எழுந்து, அவர்களைத் தேடிப் புறப்பட்டார் நாதமுனிகள், எதிரில் வருவோரிடமெல்லாம், இவ்வாறு யாராவது சென்றார்களா ? என விசாரிக்க, அவர்களும் ஆமாம் என்றார்கள். தொடர்ந்து பயணித்தார். ஓரிடத்தில் அப்படி யாரும் செல்லவில்லையே என்று சொன்னார்கள். அந்த இடத்திலேயே... தாது வருஷம், மாசி மாதம், சுக்லபட்ச ஏகாதசி தினத்தில் வைகுந்தப்பதவி அடைந்தார் நாதமுனிகள். இவர் அவதரித்தது, காட்டுமன்னார் கோயில் தலத்தில் - ஆனி வளர்பிறையில், அனுஷ நட்சத்திரத்தில். இந்தத் திருநாளில் நாதமுனிகளைப் போற்றி வழிபட்டுச் சிறப்போம்.