புராணம் என்பதற்கு பழமையான வரலாறு என்று பொருள். சிவராத்திரியன்று சிவபுராணம், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றை படிப்பர். சிவபெருமானின் வரலாற்றை விளக்குவது சிவபுராணம். ஆனால் தமிழில் சிவபுராணம் என்றதும் நினைவுக்கு வருவது நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் மாணிக்கவாசகரின் பாடல் தான். இதில் சிவனைப் பற்றிய புராணக்கதை ஏதும் இடம் பெறவில்லை. சிவ தத்துவத்தைப் பிழிந்த சாறாக இது அமைந்துள்ளது. இந்த பாடலில் , சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை என்று மாணிக்கவாசகர் குறிப்பிட்டிருப்பதால், சிவபுராணம் என்று பெயர் வந்ததாகச் சொல்வர். சிவனடியார்களால் அதிகம் பாடப்படுவது சிவபுராணமே.