பதிவு செய்த நாள்
03
மார்
2016
11:03
கோவை: கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை, கோனியம்மன் கோவிலின் தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. பேரூராதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதினம் சாந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள், அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், மேயர் ராஜ்குமார், இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, எம்.எல்.ஏ., துரைசாமி, துணை மேயர் லீலாவதி உண்ணி ஆகியோர், தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர்நிலை திடலிலிருந்து புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் புடைசூழ, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதியில் வலம் வந்து, மீண்டும் ராஜவீதியிலுள்ள தேர்நிலையை அடைந்தது. தேர் சென்ற பாதையில், தேங்காய் உடைத்து, மஞ்சள் நீர் ஊற்றப்பட்டது. திரண்டிருந்த பக்தர்கள், ‘ஓம் சக்தி பராசக்தி’ கோஷம் எழுப்பி, உப்பு பொட்டலங்களையும், வாழைப் பழங்களையும் வீசி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்களின் தாகம் தணிக்க, ஏராளமான நீர் மோர் பந்தல்கள், அமைக்கப்பட்டிருந்தன. திருவிழாவை முன்னிட்டு, மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் துணை கமிஷனர் நிஷாபார்த்திபன் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். தீயணைப்பு வாகனங்கள், தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை, அறநிலையத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.