பதிவு செய்த நாள்
04
மார்
2016
11:03
திருப்பதி: மத்திய அரசு வெளியிடவுள்ள, ஸ்மார் சிட்டிக்கான, இரண்டாவது பட்டியலில் திருப்பதியை இடம்பெறச் செய்யும் முயற்சியில், ஆந்திர மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில், 100, ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மூன்று கட்டங்களாக, ஸ்மார்ட் சிட்டி நகர வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன. இத்திட்டத்திற்காக, 98 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த பட்டியலில், திருப்பதியும் இடம்பெற்றது. முதற்கட்டமாக, 20 நகரங்கள்; இரண்டாவது கட்டமாக, 40 நகரங்கள்; மூன்றாவது கட்டமாக, மீதமுள்ள நகரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில், மத்திய அரசு வெளியிட்ட, 20 நகரங்கள் அடங்கிய முதல் பட்டியலில், திருப்பதி இடம் பெறவில்லை.திருப்பதி, உலக பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலம் என்பதால், முதல் பட்டியலில் -இடம்பெறும் என, அந்நகர மக்கள் கனவு கண்டனர். ஆனால், 3.07 மதிப்பெண் வித்தியாசத்தில், போபால், 20வது இடத்தை தக்கவைத்து கொண்டது; திருப்பதி, முதற்கட்ட வளர்ச்சி பணியில் இடம்பெற தவறிவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு வெளியிடவுள்ள இரண்டாம் கட்ட பட்டியலில் திருப்பதியை இடம்பெற செய்யும் முயற்சியில், ஆந்திர மாநில அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.