பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2016 12:03
இடையகோட்டை: இடையகோட்டை அருகிலுள்ள வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இடையகோட்டை வலையபட்டியில் ராயர்குல வம்சம் குரும்பா இன மக்களுக்கு பாத்தியப்பட்ட மகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி உற்சவ விழா 4 நாள்கள் கொண்டாடப்படும். இதன் முக்கிய நிகழ்ச்சியாக அமாவாசை அன்று அம்மனை வேண்டி வரம் கேட்கும் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். நேற்றைய விழாவில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில், கோயில் பூஜாரி பூஜப்பன் தேங்காய்களை உடைத்தார். முன்னதாக அதிகாலை குலகுருக்கள் புனிதநீர் தெளித்து சக்தி அழைத்து வந்து பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைக்கப்பட்டது.
இன்று (மார்ச் 9) பொங்கல் விழா நடைபெறும். மாலை அம்மன் இடையகோட்டை சென்று மஞ்சள் நீராடி அரண்மனையில் பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். பல மாவட்டங்களில் இருந்து திரளானோர் கோயிலுக்கு வந்திருந்தனர். வடமதுரை: வடமதுரை ஒன்றியம் ஜி.குரும்பபட்டி எல்லம்மாள் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஒருநாள் உற்சவ திருவிழா நடந்தது. இதையொட்டி தண்ணீர்துறைக்கு சென்று வழிபாடு முடித்து, பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன்பாக வட்டமாக அமர்ந்தனர். பூசாரி பழனிச்சாமி தன் பாதத்தில் ஆணிகளுடன் கூடிய மரக்கட்டை காலணியுடன் அவர்களை ஒருமுறை வலம் வந்தார். இரண்டு ஈட்டிகளால் தனது வயிற்றில் மாறி, மாறி குத்தியபடி வழிபாடு நடத்தினார். வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் சேர்வைக்காரர் தவமணியிடம் ஒரு சாட்டையடி பெற்று கொண்டு கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டபடி இருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.