பதிவு செய்த நாள்
23
ஆக
2011
12:08
திருச்செங்கோடு: அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள நாகேஸ்வரர் ஸ்வாமிக்கு, 1,008 கலசம் மற்றும் தீப வழிபாடு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்குள்ள நாகேஸ்வரர் ஸ்வாமிக்கு, நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு, சிறப்பு ஆராதனை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் பத்ரகாளியம்மன் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து பால்குடம், தீர்த்தக்குடம் மற்றும் திருவிளக்கு பூஜைக்காக முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து திருமலைக்கு சென்றனர். நாகர்பள்ளத்தில் உள்ள, 60 அடி நீள ஆதிசேஷனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு, விநாயகர் பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாஹவாசம், பஞ்சகவ்யம், பிரதான கலச பூஜை, லலிதா சகஸ்ரநாமம், சுதர்ஸன ஹோமம், வேதபாராயணமும் நடந்தது. காலை 10 மணிக்கு, ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் யாகபூஜை சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர் ஸ்வாமிகளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 1 மணிக்கு, நாகேஸ்வரர் ஸ்வாமிக்கு த்ரவியங்கள், மூலிகை சமான்கள், பழவகைகள், ஹோமங்கள், பூர்ணாகுதி, அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, நாகாபரணத்துடன் வெள்ளி கவச அலங்காரத்தில் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு, மகாலட்சுமி அஷ்டோத்திரத்துடன் நாகேஸ்வரர் ஸ்வாமிக்கு, 1,008 கலசம் மற்றும் தீப வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.