ராமேஸ்வரம்: சூரிய கிரகணத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ராமேஸ்வரம் கோவில் நடை திறக்கப்பட்டது. பின், காலை, 4:50க்கு பிரதோஷ உற்சவ மூர்த்தி ராமநாத சுவாமி, பர்வதவர்த்தனி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளியதும், கோவில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்ததும், பிரதோஷ உற்சவ மூர்த்தி சுவாமிக்கு காலை, 6:39க்கு தீர்த்த வாரி உற்சவம், மகா தீபாராதனை நடந்தது. காலை, 6:50க்கு அங்கிருந்து புறப்பாடாகி கோவிலை அடைந்ததும் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சுவாமி, அம்மனுக்கு கிரகண அபிஷேகம், பூஜை நடந்தது.