பதிவு செய்த நாள்
10
மார்
2016
11:03
சத்தியமங்கலம்: குண்டம் விழாவை முன்னிட்டு, கிராமங்களில் பண்ணாரி அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை அடுத்த நிகழ்வான பண்ணாரி மாரியம்மன் சப்பரத்தில் கிராமங்களுக்கு உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நேற்று காலை சிக்கரம்பாளையத்தில் தொடங்கியது.
இன்று மதியம், 2 மணிக்கு வெள்ளியம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு தயிர்பள்ளம், நெரிஞ்சிபேட்டை, கொத்தமங்கலம், பழையகொத்தமங்கலம், பகுடுதுறை, முடுக்கன்துறை வழியாக இரவு தொட்டம்பாளையம் சென்று அங்குள்ள அரங்கநாதர் கோவிலில் தங்குகிறது. நாளை காலை, 7 மணிக்கு தொட்டம்பாளையத்தில் வீதி உலா தொடங்குகிறது. காலை, 11 மணிக்கு தொட்டம்பாளையத்தில் இருந்து வெள்ளியம்பாளையம் புதூர் செல்கிறது. இதையடுத்து இக்கரைதத்தப்பள்ளி சென்று பின் அக்கரைதத்தப்பள்ளியில் இரவு தங்குகிறது. 12ம் தேதி காலை, 7 மணிக்கு உத்தண்டியூர் செல்கிறது. இதையடுத்து சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் தங்குகிறது. 13ம் தேதி சத்தியமங்கலம் வடக்குபேட்டையில் வீதி உலா நடக்கிறது பின்னர் இரவு சத்தியமங்கலம் வேணுகோபால்சுவாமி கோவிலில் தங்குகிறது. 14ம் தேதி பண்ணாரி மாரியம்மன் இரவு அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தங்குகிறது. 15ம் தேதி சத்தியமங்கலம் நகர் பகுதி வீதி உலா முடிந்து பட்டவர்த்தி அய்யன்பாளையம் செல்கிறது. பின்னர் புதுவடவள்ளி, புதுகுய்யனூர், பசுவாபாளையம், புதுபீர்கடவு, ராஜன்நகர் வழியாக இரவு பண்ணாரி கோவிலை அடைகிறது.
ஆலோசனை கூட்டம்: பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழாவை முன்னிட்டு, கோபி சப்கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழாவை முன்னிட்டு செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., மோகன், தாசில்தார் கிருஷ்ணன், கோவில் துணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.