கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் வரும் ஜனவரியில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2016 11:03
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் 2017 ஜனவரியில் நடைபெறும், என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார். கன்னியாகுமரி கடற்கரையில் இந்த கோயில் கட்ட விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கியது. இதில் கட்டுமான பணிகள் நடக்கிறது. வெங்கடாஜலபதி மூலஸ்தானம் கட்டும் பணி தற்போது நடக்கிறது. இங்கு வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி பூதேவி, கருடபகவான் சன்னதிகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை நேற்று பார்வையிட்ட பின்னர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுவது சிறப்பானது. திருப்பதியில் மலையில் அருள்பாலிக்கிறார். இங்கு கடற்கரையில் அருள் பாலிப்பார். கட்டுமான பணிகள் தீவிரமாக நடக்கிறது. 2017 ஜனவரியில் பொங்கலுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி வரும் பக்தர்களில் 30 முதல் 40 சதவீதம் பக்தர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.அதனால்தான் தமிழகத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இங்கு திருமலையில் நடப்பது போல் சுப்ரபாதம், ஊஞ்சல் சேவை, திருக்கல்யாணம், பிரம்மோற்சவம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருமலையில் தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வருகின்றனர். ஐந்து லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ஒரு பக்தருக்கு அதிகபட்சமாக நான்கு லட்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.