பதிவு செய்த நாள்
11
மார்
2016
10:03
குறிச்சி: குனியமுத்துார் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் விழா முன்னிட்டு. நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. சுண்டக்காமுத்துார் மெயின் ரோட்டிலுள்ள கோவிலில் விழா, 29ல் கணபதி பூஜை, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் துவங்கியது. மறுநாள் கொடியேற்றுதல், பிரசாதம் வழங்குதல், உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தன. அரவான் சிரசு ஊர்வலம், குண்டம் பூ போடுதல், 7ம் தேதி நடந்தது. கரகங்கள் ஊர் பவனி, குண்டம் இறங்குதல், அக்னி அபிஷேகம், பாரிவேட்டை நகர்வலம் வருதல், தர்மராஜா திரவுபதியம்மன் திருக்கல்யாணம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை, 8ம் தேதி அதிகாலை முதல், மாலை வரை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். நேற்று முன்தினம் உச்சி கால பூஜை, சுவாமி திருவீதி உலா நடந்தன. நேற்று காலை, பட்டாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதலும், மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தன. இன்று மாலை, 6:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.