பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வளாகத்தில், பல்வேறு வகை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன; கடல் கடந்த வணிகத்தில், அன்றே கொங்கு மண்டலம் சிறப்புற்றிருந்ததை, சிற்பங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. பழந்தமிழர்கள், கடல் கடந்து வணிகம் மேற்கொண்டனர். கொடுமணல், கல் மணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான சான்றுகள், ரோமானிய நாணயங்கள் கிடைத்தது போன்றவை, இதற்கு உதாரணமாக கூறலாம். விஸ்வேஸ்வரர் கோவிலில் இடம் பெற்றுள்ள சிற்பங்களும், பழந்தமிழரின் கடல் வணிகம் தொடர்பான சிற்பங்களாக உள்ளன. கோவிலின் தெற்கு கோபுர மண்டப தூண்களில், சீன வணிகர்கள், யாத்திரீகர்கள் வந்து சென்றதை குறிக்கும் வகையில், சில சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அம்மனின் மகிஷாசுரமர்த்தினி அவதார சிற்பம் ஒன்றும் முன்மண்டப தூணில் உள்ளது. ஆக்ரோஷ ரூபியாக, பல கரங்களுடன் அரக்கனை அன்னை வதம் செய்யும் காட்சி, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில், கோவில்களில் நாட்டியமாட ஏராளமான பெண்கள் இருப்பர்; அதில், தலைமை நாட்டிய பெண்ணை, தலைக்கோலி என்று அழைப்பர். அத்தகைய தலைமை நாட்டிய பெண்ணின் சிற்பம் ஒன்றும், விஸ்வேஸ்வரர் கோவிலில் பார்க்க முடிகிறது. இது, நாட்டியக்கலைக்கு ஆலயங்கள் அளித்து வந்த முக்கியத்துவத்தை, வெளிப்படுத்துகிறது.
இக்கோவில் சிற்பங்களின் மற்றொரு சிறப்பம்சமாக, கோவில் மணி மாடம் அமைந்துள்ளது. கோவிலின் இடதுபுறத்தில், கால பைரவர் சன்னதிக்கு வெளியே, முன்மண்டபத்தில், மணி மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இது, கல் மண்டப மேற்கூரையில் இருந்து உயரமாக, நான்கு தூண்களுடன், தனி கல் மண்டபம் போலவே உள்ளது. மணி மாடத்தில், பெரிய அளவிலான மணி உள்ளது. கோவில் உற்சவ பூஜை காலங்களில், இந்த மணி ஒலிக்கிறது. பழமையான இக்கோவில் மணியும், அதன் பிரமாண்ட மண்டபமும், விஸ்வேஸ்வரர் கோவிலின் பழமைக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. கோவிலில் பழமை மாறாதவாறே, தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.