பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
அன்னுார்: மன்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையானது. இக்கோவிலில், சிவபெருமான் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. கோவில் திருப்பணி ஆலோசனை குழு கூட்டம் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமி தலைமையில், கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில், அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. கோவிலில் புதிதாக, 63 நாயன்மார்கள் சிலை அமைத்தல், அனைத்து கோபுரங்களிலும் சுதை வேலை செய்தல், சிவன் சன்னதியையும், அம்மன் சன்னதியையும் இணைக்கும் வகையில் மேல் கான்கிரீட் தளம் அமைத்தல், தரையில் கல்தளம் அமைத்தல், கோவிலில் முழுமையாக வர்ணம் பூசுதல் ஆகிய திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இனி ஒவ்வொரு மாதமும், அமாவாசையன்று காலை, 10:30 மணிக்கு கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.