பதிவு செய்த நாள்
14
மார்
2016
11:03
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வான வேடிக்கைகளுடன், தீர்த்தக்கலசம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
புதிதாக பிரதிஷ்டை செய்ய உள்ள, 63 நாயன்மார் சிலைகள், மலர் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பழம் பெருமை வாய்ந்த, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் கும் பாபிஷேகம், வரும், 18ல் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியாக, தீர்த்தக்கலசம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, டவுன்ஹால் விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலத்தில், கேரளா மாநில கலாசார உடையில் பள்ளி மாணவியர், மங்கல பொருட்களுடன் திருவிளக்கு ஏந்தி வந்தனர். தொடர்ந்து கலச தீர்த்தங்கள், முளைப்பாரியை பெண்கள் சுமந்து வந்தனர்.
கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, எம்பெருமானின் தத்ரூபமாக காட்சிகளுடன் கூடிய வண்ண விளக்கு வாகனங்கள் அணிவகுத்து வந்தன. மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்; வள்ளி, தெய்வானையுடன், மயில் வாகனத்தில் ஆறு முகன்; சிம்ம வாகனத்தில் அம்மன், சிவனை வணங்கும் சீதாராமன், உடுக்கை அடிக்கும் சிவன் என, அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள், பலரையும் பிரமிக்க வைத்தன. கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, 63 நாயன்மார் சிலைகள், மலர் அலங்கார ரதத்தில் எழுந்தருளினர். நாயன்மார் ரதத்துக்கு முன், சிவனடியார்கள் கைலாய வாத்தியம் இசைத்தபடி, நடனமாடியும், நந்திக்கொடி ஏந்தியும் சென்றனர். நாதஸ்வரம், பேண்டு வாத்தியம், மாடு, மயில் ஆட்டம், சலங்கையாட்டம், வெள்ளை குதிரை ஆட்டத்துடன் நடைபெற்ற ஊர்வலத்தை காண, திருப்பூர் நகரவாசிகள் வீதிகளில் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். பெண்களின் கும்மியாட்டம், கோலாட்டம் என, 21 வகையான நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் நடைபெற்றன. வான வேடிக்கை நிகழ்ச்சி, நகரை அதிர வைத்தன.
டவுன்ஹாலில் துவங்கிய ஊர் வலம், குமரன் ரோடு, யுனிவர்சல் ரோடு, வளம் பாலம் வழியாக, செல்லாண்டியம்மன் கோவில் வந்தது. அங்கிருந்து, புதிதாக அமைக்கப்பட்டுள்ள நொய்யல் ரோடு வழியாக, பழைய நொய்யல் பாலம் வந்து, ஈஸ்வரன் கோவிலை அடைந்தது. அங்கிருந்து, ஈஸ்வரன் கோவில் வீதி, அரிசி கடை வீதி என, தேரோடும் வீதிகளில் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழாவுக்காக, பிறந்த வீட்டு சீதனமாக, சீர்வரிசை தட்டுக்கள் வழங்கப்பட்டன. ஊர்வலத்தில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல் யாக பூஜை:விஸ்வேஸ்வரர் கோவிலில், யாக சாலை பூஜை இன்று துவங்குகிறது. காலை, 10:05க்கு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவை; மாலை, 5:35க்கு, பிரவேச பலி, வாஸ்து சாந்தி ஆகியன நடக்கின்றன. நாளை காலை, 8:35க்கு, நவக்கிரக ஹோமம்; மாலை, 5:35க்கு, முதற்கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து, ஆறு காலை பூஜை நடத்தப்படும். வரும், 18ம் தேதி காலை, 9:45 முதல், 10:05க்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.