வடமதுரை: வடமதுரை அருகே கிராம மக்கள் சட்டசபை தேர்தலுக்காக ஊர் திருவிழாவை தள்ளி வைத்தனர். வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டை ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் வெள்ளபொம்மன்பட்டி. இங்குள்ள மக்கள் அரசியல் பிரச்னைகளால் கிராமத்தில் பிரச்னை, பிரிவினை ஏற்படக்கூடாது என கருதுவர். இங்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 5 வேட்பாளர்களை ஒருசேர அழைத்து, கிராம கோயில்களில் வழிபட செய்து மக்களும் சேர்ந்து கொண்டு ஒரே குழுவாக சென்று மனுத்தாக்கல் செய்ய வைத்தனர். இதுபோன்ற அணுகுமுறை சுற்றுப்பகுதி கிராமங்களில் பார்ப்பது அரிது.ஊர் கூட்டம்: இங்கு கிராம கோயில் திருவிழா வழக்கமாக சித்திரை மாத பிற்பகுதியில் நடப்பது வழக்கம். இதற்காக ஊர் நாட்டாண்மை வேலுச்சாமி தலைமையில் ஊர்க்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தேர்தல் நேரத்தில் திருவிழா வைத்தால், தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் முடிந்த பின்னர் திருவிழாவை வைகாசி மாதம் நடத்தலாம் என மக்கள் கருத்து தெரிவித்தனர். இதனையேற்று கொண்டு கிராம பெரியவர்கள் தேர்தலுக்கு பின்னர் திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர்.