பதிவு செய்த நாள்
15
மார்
2016
11:03
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் குண்டம் தேர்த்திருவிழா, பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் திருவிழாவுக்கு, தமிழகத்தின் பல, பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர். கோவிலின் குண்டம் திருவிழா இன்றிரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கி, ஏப்.,2ம் தேதி வரை, 18 நாட்கள் நடக்கிறது. இன்று இரவு, 9.30 மணிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து, 19ந்தேதி இரவு கம்பம் நடப்படுகிறது. வரும், 23ம் தேதி இரவு கிராம சாந்தியும், 24ம் தேதி கொடியேற்றமும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 29ம் தேதி அதிகாலை காரைவாய்கால் மாரியம்மன் கோவிலில் பூ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் வைபவம், 30ம் தேதி நடக்கிறது. அன்று சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 31ம் தேதி பெரியமாரியம்மன் மலர் பல்லக்கிலும் வீதிஉலா செல்கிறார். ஏப்.,1ம் தேதி, தேர் நிலை சேர்கிறது. அன்று மாலையில் சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா செல்கின்றன. ஏப்.,2ம் தேதி மதியம் கம்பம் எடுத்தல், மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.