ஞானிகள் சீடர்களுக்கு தத்துவ உபதேசம் செய்வதற்கு பேச்சை விட மவுனத்தையே சாதனமாக பயன்படுத்தினர். வேதம் மவுனத்தாலேயே கடவுளை விளக்குகிறது என கைவல்யம் என்னும் நுõல் கூறுகிறது. கடவுளை அடைய முயற்சிக்கும் ஆன்மிகவாதி ஏறிச் செல்ல வேண்டிய படிகளில் மவுனம் மிக முக்கியமானது. மவுனத்தின் மூலம் அளப்பரிய சக்தியை அடைய முடியம். சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனிவர்கள் ஞானம் பெற சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவனும் தட்சிணாமூர்த்தியாக கல்லால மரத்தடியில் ஞான குருவாக எழுந்தருளி மவுனமாகவே தத்துவங்களை உபதேசம் செய்தருளினார். மவுனத்தின் மகத்துவத்தை உணர்த்தும் இந்தக் கோலம் சிவபெருமானின் யோக வடிவமாகும். காஞ்சிப் பெரியவர் ஆண்டில் சில மாதங்கள் மவுன விரதம் மேற்கொள்வது வழக்கம்.
அவர் மூன்று விதமான மவுனங்களை மேற்கொள்வார். சில சமயத்தில் சீடர்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களைத் தம் கையால் தரையில் எழுதிக் காண்பிப்பார். அப்போது பெரியவரின் விரலில் ரத்தம் தோய்ந்து புண்ணாகியும் விடுவதுண்டு. சில நேரத்தில் கண், கை, முக ஜாடையால் தம் எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்துவார். வேறு சில சமயங்களில் எந்த ஜாடையோ, கையால் எழுதுவதையோ கூட செய்ய மாட்டார். எந்த பொருளையும் உற்று நோக்கவும் மாட்டார். பெரியவர் மவுன விரதம் அனுஷ்டிக்கும் போதும், பக்தர்கள் அவரை தரிசித்து ஆசி பெற காஞ்சி சங்கர மடத்திற்கு வருவார்கள். அப்போது அவர் சலனம் இல்லாமலே அமர்ந்த நிலையில் இருப்பார். பிறர் கூறும் விஷயங்களை தம் மனம், புத்தியில் ஏற்றுக் கொள்ளாமல் தம்மைத் தாமே நோக்கும் நிலையில் மவுனத்தில் ஆழ்ந்திருப்பார். இந்த நிலைக்கு காஷ்ட மவுனம் என்று பெயர். மாதம் தோறும் மூல நட்சத்திரத்தில் பெரியவர் இந்த மவுனவிரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். ஒருமுறை பெரியவர் மவுன விரதத்தில் இருந்த போது மியான்மர் (பர்மா) நாட்டில் இருந்து புத்த சமயத்தை பின்பற்றும் கோடீஸ்வரர் ஒருவர் வந்தார். தனக்கிருந்த ஆன்மிக சந்தேகங்களை பெரியவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காணப்பட்டார். ஆனால் பெரியவர் தம் கருணை மிகுந்த பார்வையால், அந்த பக்தருக்கு பூரண ஆசியை மட்டும் வழங்கி அருள் புரிந்தார். சுவாமிகள் பேசாமல் இருந்த சமயத்தில் கூட, அவரது அருட்பார்வையால் பக்தர்களின் துன்பம் நீங்கி மனம் சாந்தி அடைந்தது. அதுதான் அவரது மகிமை! (மகான் காஞ்சிப் பெரியவர்)