பரமக்குடி: குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் குருத்தோலை ஊர்வலங்கள் நடைபெற்றது. பரமக்குடி புனித அலங்காரமாதா சர்ச்சில் குருத்தோலை விழா கொண்டாடப்பட்டது. ஐந்துமுனை ரோட்டருகே உள்ள திடலில் ஜெபம், வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை ஏந்தியபடி மக்கள் ஊர்வலமாக சென்று சர்ச் வளாகத்தை அடைந்தனர். பங்குத்தந்தை செபஸ்தியான் அவர்களை வரவேற்றார்.சர்ச் வளாகத்தில் சிறப்பு வழிபாடு, கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் சிலுவையின் அடையாளமாக மக்கள் குருத்தோலைகளை தங்களது வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
* ராமநாதபுரம் புனித ஜெபமாலை சர்ச், சி.எஸ்.ஐ., சர்ச், புனித சவேரியார் சர்ச்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. * கீழக்கரை தூய பேதுரு சர்ச்சில் சபை போதகர் ரூஸ்வெல்ட் தலைமையில் குருத்தோலை ஞாயிறு தின ஊர்வலம் நடந்தது. திருச்சபையை சேர்ந்த இறைமக்கள் ஏராளமானோர் துதிப்பாடல்களை பாடியும், வேத வசனங்களை படித்தபடியும், கைகளில் குருத்தோலையை பிடித்தவாறு, நகரின் பிரதான வீதிகளில் வலம் வந்தனர். சர்ச்சில் நடந்த சிறப்பு பிரார்த்தனை, ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். * தொண்டியில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு தூயசிந்தாதிரை ஆலயத்திலிருந்து கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடற்கரை சாலை வழியாக சென்ற ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.