பதிவு செய்த நாள்
21
மார்
2016
12:03
திருப்பூர்:"பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 40 சிறப்பு பஸ் இயக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா, 7ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது; 15ல் கம்பம் நடப்பட்டது. இன்றிரவு அம்மன் அழைப்பு, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்குவதற்காக, பண்ணாரி வருவர். விழாவை ஒட்டி, அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்துக்கு உட்பட்ட, திருப்பூர் கிளையில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அவிநாசி, புளியம்பட்டி, பவானி சாகர் வழியாக பண்ணாரிக்கும், பஸ்கள் இயக்கப்படும். இன்று காலை துவங்கும் இச்சேவை, 22 இரவு வரை இருக்கும். பஸ்களில், வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்றனர்.